தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறையின் 2020-21 கொள்கை விளக்கக் குறிப்பில், மின் மிகை உற்பத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.
இதுதொடர்பாக, எல்லோருக்கும் புரியும்படி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் பி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. அது பின்வருமாறு :
“அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கடந்த ஆண்டில் இருந்து வெறும் 538 மில்லியன் யூனிட் மின் பயன்பாடு மட்டுமே அதிகரித்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. என் கணிப்பில் இது இன்னும் குறைவாகவே இருக்கும்.
மக்களின் அத்தியாவசிய தேவையான மின்நுகர்வு குறைவது மாநில இயக்கமின்மையின் குறியீடு. மின் நுகர்வு குறைவு வீழ்ச்சியின், செயலின்மையின் வெளிப்பாடு! எளிமையாகச் சொல்வதானால் மக்கள் 'மின் விளக்கை' போடவே யோசிக்கிறார்கள் என்று பொருள்!
இதே எரிசக்தித் துறை குறிப்பின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றுக்கும் எதிராகவே இந்த அரசு செயல்பட்டுள்ளது என்று பொருள். அதிகப்படியாக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறவர்கள் பெரும் தொழிற்சாலைகளே! இவர்கள் குறிப்பிடும்படியே மின் தேவை இவ்வளவு குறைகிறது என்றால், தொழிற்சாலைகள் குறைகிறது என்பதே பொருள்!
தொழிற்சாலைகள் இல்லையென்றால் வேலையில்லை, உற்பத்தி இல்லை, வாய்ப்புகள் இல்லை, வளர்ச்சி இல்லை. இதன் அடிப்படையில் 2006-11 தி.மு.க ஆட்சியில் இருந்த மின் தேவை 8.64%; அ.தி.மு.கவின் 9 ஆண்டுகளின் மின்தேவை வெறும் 4.64% மட்டுமே!
எனில், அ.தி.மு.க ஆட்சியில் சக்கரங்கள் ஓடவில்லை, தொழிற்சாலைகள், தொழில்கள் இயங்கவில்லை, உற்பத்தியை வாங்க ஆளில்லை, கைகளில் பணமில்லை என்பதே உண்மை.
தலைவர் கலைஞர் அவர்களின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், அ.தி.மு.கவின் 9 ஆண்டுகால ஆட்சி தடுமாறுவது தி.மு.கவின் சிறந்த நிர்வாகத்திற்கான சான்றாகும்!
உடனே தி.மு.க ஆட்சியில் மின்பற்றாக்குறை என்ற அபத்தமான வாதத்தைக் கூறுவார்கள். ஏன் பற்றாக்குறை என்றால் அது வளர்ச்சியின் வெளிப்பாடு.
1. மின்சார பயன்பாட்டில் நிலவும் மந்தநிலை பொருளாதார தோல்வியின் அறிகுறியாகும்.
2. வாங்கும் மின்சாரம் (5,000 MW Capacity) உற்பத்திக் கணக்கில் சேராது.
எனவே ஆட்சியாளர்கள் "மின்மிகை" என்று சொல்லி பெருமை பெற வேண்டாம்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.