தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.
கேள்வி நேரத்தின்போது பேசிய ஆற்காடு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், “12ம் வகுப்பில் கணக்கு புத்தகம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒரு கணக்கு புத்தகத்தை எடுப்பதற்கு 147 வகுப்புகள் தேவை. ஆனால் ஒரு புத்தகத்தை எடுக்கவே ஆசிரியர்களுக்கு நாட்கள் போதாது; எப்படி இரண்டு புத்தகங்களையும் முடித்து தேர்வு நடத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “இந்த பிரச்னை இருப்பதால் அடுத்த ஆண்டு அதை சரி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறோம்” என்றார்.
மீண்டும் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்காக அரசு பொறுப்பேற்குமா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை ஆசிரியர்களுக்கே பாரமாக உள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்காதபோது, அவர்களை மாணவர்களுக்கு பயிற்சியளிக்க அனுப்புவது எந்த வகையில் நியாயம்? தற்போதைய மாணவர்களில் 99 சதவீத மாணவர்களுக்கு தற்போதைய கல்விமுறை புரியவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “இந்த 9 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் செய்யவேண்டிய ஆய்வுகள் இதுவரை முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்ற தெரியவில்லை. இதுபோன்ற ஆய்வுகள் நடைபெற்றால் மட்டுமே ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளி குறையும். தேவைகள் என்ன என்பதை அறியமுடியும்.
பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை வகுப்புகளை எடுக்கும் சூழல் அரசுப் பள்ளிகளில் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. 2 ஆண்டுகளாக TET தேர்வு எழுதிவிட்டு பணி இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு எப்போது பணி வழங்கப்படும்” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தற்போதுதான் அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் முடிவடைந்தது. 15 நாட்களுக்குள் ஆசிரியர்கள் பணி வழங்கிட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்” என்றார்.