கோவை கோணியம்மன் கோயில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். கடந்த 4-ம் தேதி இந்த தேர்த்விழா நடைபெற்றது.
அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மொத்தம் 10 பெண்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சி.சி.டி.வி., கேமிராவில் ஆய்வு செய்தபோது 3 பெண்கள் சிக்கினர்.
இந்துமதி, பராசக்தி, செல்வி என்ற அந்த மூன்று பெண்களுமே சகோதரிகள் ஆவர். சிறுவயதில் இருந்தே திருடி பழக்கப்பட்டுள்ளனர்.கோயில் திருவிழாக்களில் கூட்டநெரிசலில் பெண்கள் கழுத்தில் இருக்கும் தங்க செயின், தாலி செயின்களை பறிப்பதில் இவர்கள் கில்லாடிகள்.
பிரபலமான ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் இவர்கள் கலந்துகொண்டு தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கி விடுவார்கள். கொள்ளையடித்து, கொள்ளையடித்தே சென்னை திருவான்மியூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டி இருக்கிறார்களாம்.
இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.பராசக்தி இலங்கையிலும், செல்வி லண்டனிலும், இந்துமதி கேரளாவிலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
எந்த ஊரில் தேர் திருவிழா நடக்கும் என்று இந்துமதியின் கணவர் பாண்டியராஜனுக்கு தெரியுமாம். தகவல் தெரிந்ததும் 3 பேருக்கும் சொல்வார். அவர்களும் இதற்காக விமானம் ஏறி, டூரிஸ்ட் விசாவில் சென்னை வந்து தங்கி, பிறகு எங்கு கொள்ளை அடிக்கவேண்டுமோ அங்கு புறப்பட்டுச் செல்வார்களாம்.
திருவிழா நடக்கும் ஊரிலேயே ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கி திருவிழாவுக்கு செல்வார்களாம். பெண்களிடம் நகையை கொள்ளையடித்துவிட்டு அறைக்கு வந்துவிடுவார்களாம். ஒரு திருவிழாவில் 100 சவரன் வரை கொள்ளையடிப்பார்களாம். கொள்ளையடித்த நகைகளை விற்று காசாக்கி அதன்பிறகு விமானத்தில் ஏறி அவரவர் வசிக்கும் நாடுகளுக்குச் சென்றுவிடுவார்களாம்.
இந்த மூவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்த திருவிழாவில் திருடப்பட்ட 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீதி 15 சவரன் நகை பாண்டியராஜனிடம் உள்ளது. தப்பி ஓடிய அவரை போலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.