உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வைரஸ் பாதிப்பு தங்கள் நாட்டிற்குள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று உலக மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இந்த பாதிப்பு பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி கடலூரில் பரவிய வதந்தியால் ஒரு கோழிக் கடைக்காரர் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி முகமது. இவர் அப்பகுதியிலேயே கோழிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர் கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கோழி வாங்க வந்துள்ளான்.
பணம் இல்லாமல் இலவசமாக கோழி கேட்டதால் தரமறுத்த கடைக்காரரிடம் “எனக்கே கோழி இல்லைனு சொல்லிட்டல்ல... இரு.. உன் கடை எப்படி ஓடுதுனு பார்க்கலாம்” என்று சொல்லிட்டுக் கிளம்பியுள்ளான். சிறுவன் கோபத்தில் பேசுவதாக நினைத்த கடைக்காரரும் இதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்.
ஆனால் அந்தச் சிறுவன், அந்த கடையின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த கடையில் கோழி வாங்கிச் சாப்பிட்ட ஒருவர் வயிற்று வலி காரணமாக என்.எல்.சி அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவனைக்குச் செல்லும்படி அந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும், அதன்படி கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணிநேரம் மட்டுமே மருத்துவர்கள் கெடு கொடுத்துள்ளதாகவும் வாட்ஸ்-அப் மூலம் வதந்தி பரப்பியுள்ளார்.
அவரது இந்த வதந்தியால் பீதி அடைந்த பொதுமக்கள் அசைவ உணவை சாப்பிடவே அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக கோழிக்கடை வியாபாரம் குறைந்துள்ளது. விடுமுறை நாட்களில் வியாபாரம் படுமோசமாக சரிந்துள்ளது. கடைக்கு தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களும் வரவில்லை என்பதால் பக்ருதீன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் அந்தச் சிறுவன் குறித்து புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுவன் வதந்தி பரப்பியது உறுதியானதை அடுத்து சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.