தமிழ்நாடு

“அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் தேறவில்லை” : முத்தரசன் ஆதங்கம்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெறவேண்டும் என்ற ‘ஆசை’ யில் நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க அரசு தயாரித்துள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

“அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் தேறவில்லை” : முத்தரசன் ஆதங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை, 10 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தேர்தல் வாக்குறுதி அளிப்பதுபோல இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கையாகும்.

அடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 59 ஆயிரத்து 209 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 618 கோடியாக இருப்பது நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை கைவிடுவதில் முடியும்.

“அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் தேறவில்லை” : முத்தரசன் ஆதங்கம்!

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியும் இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 7,500 கோடி ரூபாயை பெறுவதற்கு அழுத்தம் தரத் தயாராக இல்லை.

இதுவரை தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் தொகை 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மீது செலவுச் சுமை ஏற்றுவதை நிதிநிலை அறிக்கை மறைத்துள்ளது.

தூர்வாருவதில் ‘அக்கறை ‘ காட்டும் நிதிநிலை அறிக்கை, உடல் உழைப்பு தொழிலாளர்களின் பல்வேறு வாரியங்களுக்கு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்துள்ள அரசு, அந்தப் பகுதியிலும் சரி, பிற பகுதிகளிலும் சரி வேளாண்மை துறையில் பொது முதலீடு செய்யும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கவில்லை. விவசாயத்தை வர்த்தக நிறுவனங்களிடம் மீட்க முடியாத வகையில் அடகு வைக்க நிதிநிலை அறிக்கை வழிவகை செய்துள்ளது.

“அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் தேறவில்லை” : முத்தரசன் ஆதங்கம்!

வெளிநாட்டு முதலீடு வருகிறது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் முழங்கப்படுகிறது. இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் தேடிப்பார்த்தாலும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. முடங்கிக் கிடக்கும் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கு புத்துயிரூட்டும் திட்டங்களும் இல்லை.

ஆரம்ப சுகாதாரம், மருத்துவம் என மக்கள் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் தரவில்லை. தாய் சேய் நலனுக்கு முக்கிய காரணமான ஆஷா பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியம் குறித்து கவலைப்படவில்லை. மொத்தத்தில் அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அ.தி.மு.க தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories