நீலகிரி முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த கோவில் ஒன்றுக்கு செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க அமைச்சரின் இந்த செய்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திண்டுக்கல் சீனிவாசனை பதவியில் இருந்து நீக்கி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த தேசிய பழங்குடியின நல ஆணையம், அமைச்சர் சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றச் சொன்ன விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனக் கேட்டு தமிழக டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.