டி.என்.பி.எஸ்.சி குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றவர்கள், இடைத்தரகர்கள் எனப் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக புகார் எழுத்துள்ளது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி தேர்வைத் தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்கள் குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள்.
அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சி.பி.ஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.