மலைவாழ் மாணவனை இழிவுபடுத்திய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரியும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து ஊர்வலமாகச் சென்று முதலமைச்சர் வீடு முற்றுகையிட முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்து பேருந்தில் ஏற்றிச்சென்றனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இதுகுறித்துப் பேசுகையில், “வாச்சாத்தி வன்கொடுமை போன்று மலைவாழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அரசு அவர்களுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கொடுமை செய்து வருகிறது.
வனத்துறை அமைச்சர், பள்ளி மாணவனை அழைத்து அவருடைய காலணியை கழற்றச் சொன்னது மிகவும் அவமானகரமான செயல். அந்த மாணவனின் குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில், அடுத்தநாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அந்த மாணவனின் குடும்பத்தினரை அழைத்துப் பேசி 50 ஆயிரம் பணம், சகோதரிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை, தாயாருக்கும் அரசு வேலை என்று சமரசம் செய்து வழக்கை திரும்பப் பெறச் செய்துள்ளனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் இதுபோன்ற ஒடுக்குமுறையை கையாள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறும்.” எனத் தெரிவித்தனர்.