பழங்குடியின சிறுவனை அவமதித்து சாதிய வெறியில் தன்னுடைய காலணியை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று கோவையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கொள்கை வழியில் "நீலச் சட்டைப் பேரணி" மற்றும் "சாதி ஒழிப்பு மாநாடு" நடைபெற இருப்பது குறித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது, “மலைவாழ் மாணவரை அழைத்து தனது காலணியை கழற்றிவிடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பதவி விலகவேண்டும். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
சுயமரியாதை கொள்கையை அடிப்படையாக வைத்து பெரியார் கொள்கையை பின்பற்றுகிறோம் என்று கூறிவரும் அ.தி.மு.கவின் அமைச்சரே தனிமனித சுயமரியாதையை ஒடுக்கும் அளவிற்கு நடந்துகொள்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல். அந்தச் சிறுவனிடம் அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும்.” என வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு நடைபெற்ற கருஞ்சட்டை பேரணிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நடைபெறவிருக்கும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டிற்கு, தமிழக அரசும் பல்வேறு இந்துத்துவ அமைப்பினரும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெறவேண்டிய பேரணிக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம்.
காவி உடைக்கு ஆதரவாக பேரணி என்றால் உடனே அனுமதி கிடைத்திருக்கும். பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்கான சாதி ஒழிப்பு மாநாடு என்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இப்பேரணியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். நீலச்சட்டை பேரணியில் சுமார் 50 அயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பல ஆண்டுகளாக சாதிய கொடுமையால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விடிவு சொல்லும் நிகழ்வாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.