தந்தை பெரியார் குறித்து துக்ளக் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் இந்துத்வா தலைத்தூக்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக தந்தை பெரியார் விளங்குகிறார் என்பதால் பெரியார் குறித்து அவதூறு கருத்துகளையும், அவரின் சிலையை சேதப்படுத்தும் நடவடிக்கையையும் இந்துத்வா ஆதரவாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கையும் தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலவாக்கத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தி.மு.க மற்றும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்துவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டது. அந்தச் சிலையை உடைத்தவர்களை போலிஸார் கைது செய்தார்களா இல்லையா என்பது தெரியாத நிலையில் மீண்டும் பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.