புதுச்சேரியில், பிரெஞ்சு அரசு ஆட்சியமைத்தபோது நகரத்தின் முக்கிய மூன்று இடங்களில், பிரமாண்ட மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. புதுச்சேரியின் பெரிய மார்கெட், சிறிய மார்க்கெட் மற்றும் முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன.
காலப்போக்கில், முத்தியால்பேட்டையில் உள்ள பாரம்பரியமிக்க மணிக்கூண்டு பழுதானது. தற்போது இந்த மணிக்கூண்டினை நவீன முறையில் நாராயணசாமியின் தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசு சீரமைத்து புதுப்பித்துள்ளது. இந்த மணிக்கூண்டின் தொடக்கவிழா திருவள்ளுவர் தினமான இன்று நடைபெற்றது.
இந்த மணிக்கூண்டில் ஒவ்வொரு மணிக்கு ஒருமுறையும் மணியடித்து நேரம் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக திருக்குறள் ஒன்றும், அதன் விளக்கமும் சொல்லப்படுகிறது. இதனைக்கேட்டு, மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
திருவள்ளுவர் தினத்தன்று மணிக்கு ஒருதரம், திருக்குறள் சொல்லத் துவங்கியுள்ள மணிக்கூண்டிற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.