உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சண்முகசுந்தரம் மோகன் (89) ஓய்வுக்குப்பின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த மோகன், மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர், 1954-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கி சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். மேலும்,1990 பிப்ரவரி முதல் மே வரை கர்நாடக பொறுப்பு ஆளுனராக செயல்பட்டுள்ளார்.
1991-ம் ஆண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓய்வுக்குப்பின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்தாருடன் வசித்துவந்த முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
நீதியரசர் மோகனின் இறுதிச்சடங்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. நீதியரசர் மோகனின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “நீதியரசர் மோகன் ஐயா, மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க ஆட்சியின் போது அரசின் சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டார்.
பின்னர் நீதியபதியாக பதவியேற்ற அவர், பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். நீதியரசர் மோகன் இலக்கியம், தமிழ் மீது காதல் கொண்டவர்” எனத் தெரிவித்தார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.