விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் - சிவகாமி தம்பதியர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அருண் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஓரளவு பணம், சொந்த வீடு என நிம்மதியாக அருண் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் நகைத் தொழில் முற்றிலும் நலிவடைந்துள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார். மேலும் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் இந்த லாட்டரிச் சீட்டுகளில் பல லட்சம் பரிசு விழும் என விளம்பரப்பட்டது.
இதனால் லாட்டரிச் சீட்டுகளை வாங்கிக் குவித்துள்ளார். ஆனால் பரிசுகள் எதுவும் விழவில்லை. இதன்காரணமாக லட்சக்கணக்கில் கடனாளியாக மாறியிருக்கிறார். தொடர்ந்து குடும்பத்தை சமாளிக்க முடியாமல் மன அழுத்ததிலிருந்த அருண் நேற்று தனது 3 குழந்தைகளுக்கு நகை செய்ய பயன்படுத்தும் சயனைடை பாலில் கலந்துக் கொடுத்து கொன்றுள்ளார்.
பின்னர் தனது மனைவியுடன் தானும் சேர்ந்து நடந்த சம்பவங்களைக் கூறி தற்கொலை செய்யப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் சயனைட் சாப்பிடும் முன்பாக வீடியோவை அவரது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார்.
வீடியோ பார்த்து சகநண்பர்கள் பதறிப்போய் அருண் வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டியிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு 5 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் முன்பே உயிரிழந்ததாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடைசெய்யப்பட்ட லாட்டரி ஒரு குடும்பத்தையே தற்கொலை செய்கொள்ள வைத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட திருட்டு லாட்டரி தடையின்றி விற்கப்பட்டு வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன. இப்போது குடும்பம், குடும்பமாக தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. எடப்பாடி ஆட்சியின் அவலத்தை இச்சம்பவங்கள் காட்டுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.