விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்திற்கு சென்று தட்டிக்கேட்ட இளைஞர் நேற்று நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. கோட்டைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட பிரிவினர் நேற்று நள்ளிரவு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமசுப்பு தான் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று விருப்ப மனு வாங்கியுள்ளார். ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து இந்தக் கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மகன் சதீஷ்குமார் (27) அங்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும், சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்புவின் ஆதரவாளர்கள் சிலர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை தங்களது காரில் அழைத்துக்கொண்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வெம்பக்கோட்டை போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலிஸார் வழக்குப்பதிவு செய்து கோட்டைப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலர் ராமசுப்பு உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் எம்.பி.ஏ பட்டதாரி. சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். சதீஷ்குமார் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.