தேனி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில் அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், நாடாளுமன்றத் தேர்தலின் போது தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரவீந்திரநாத் பதிலளிக்க உத்தரவிட்டார். இதுவரையில் பதில் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓ.பி.ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யும் வரை தற்காலிகமாக எம்.பி. பதவி வகிப்பதை நிறுத்தி வைக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.