தமிழகத்தில் அண்மையில் பெய்து வந்த கனமழையால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவ்வளவாக மழைப்பொழிவு இல்லாததால் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், பனிப்பொழிவு தொடங்கிவிட்டதால் இனி மழைக்கு வாய்ப்பே இருக்காது என சென்னை மக்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், நாளை (டிச.,10) தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டலத்தில் உள்ள காற்று சுழற்சியின் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், உள் தமிழகத்தைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் மட்டுமே லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 25-31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.