நகைச்சுவர் நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில், தான் அமைத்திருந்த கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது போல காட்சி அமைந்திருக்கும்.
இதனை திரையில் காண்பதற்கு அத்தனை நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும். அதே பாணியில் மதுராந்தகத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழி பேரூராட்சியில் அமைந்துள்ள ஏரி வறண்டு காணப்பட்டதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 30 லட்சம் ரூபாய் செலவில் பெரிய அளவிலான கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கிணற்றைச் சுற்றி உயரமாக சுற்றுச்சுவர் அமைக்காமல், தாழ்வான சுவர் மட்டுமே அமைத்துள்ளனர். மழை பெய்து ஏரிக்கு தண்ணீர் வந்தால் கிணறு மூழ்கிவிடும் என்றும், இதனை அமைத்தும் பயனில்லை என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் ஏரி தற்போது நிரம்பியிருக்கிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட அந்தக் கிணறு நீரில் மூழ்கியுள்ளது. நீரில் மூழ்கி காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல், அதனை குடிநீராக தங்களுக்கு வழங்குவதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.