நேற்றைய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற ’ஜீ இந்துஸ்தான்’ செய்தி சேனலின் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ நெட்வொர்க் சார்பில் ‘ஜீ இந்துஸ்தான்’ என்கிற பெயரில் தொடங்கப்படவிருக்கும் செய்தி சேனலின் விளம்பரத்தில், தமிழ் ஊடகங்களின் முன்னணி ஊடகவியலாளர்களின் பெயர்களை நாகரிகமற்ற வகையில், நேரடியாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்தனர்.
பல்வேறு நிறுவனங்களும் விளம்பரத்திற்காக புதிய யுக்திகளைப் பயன்படுத்தினாலும், போட்டி நிறுவனங்களை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சிப்பது இங்கு மரபல்ல. அப்படி இருக்கையில், போட்டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலான பாணியில் விளம்பரம் வெளியிட்டுள்ளது கடும் கண்டனங்களைச் சந்தித்தது.
இந்நிலையில், சென்னை நிருபர்கள் சங்கம், ஜீ இந்துஸ்தான் சேனலின் விளம்பர முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “குறிப்பிட்ட அந்த விளம்பரம் மூன்று முன்னணி செய்தி தொலைக்காட்சி ஊடகங்களின் நெறியாளர்களை மோசமான முறையில் சித்தரிக்க முயல்கிறது. இது அவர்கள் மீதான பிம்பத்தை திட்டமிட்டு அவதூறு செய்யும் நோக்கமுடையது.” எனத் தெரிவித்துள்ளது.