திருநெல்வேலி மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். அதேபகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என அவர்கள் எண்ணிவந்த நிலையில், வான்மதியின் பெற்றோர் இருவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, 2 மாதங்களுக்கு முன் வீட்டை வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் திருநெல்வேலி டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு நம்பிராஜனின் நண்பர் முத்துப்பாண்டி என்பவர் இவர்கள் இருவரை சந்திக்க வந்துள்ளார்.
அப்போது முத்துப்பாண்டி வெளியில் செல்லலாம் என்று நம்பிராஜனை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் நம்பிராஜன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி வான்மதி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், குறுக்குத்துறை ரயில்வே கேட்டருகே தண்டவாளத்தில் நம்பிராஜன் தலைவேறு, உடல் வேறாக துண்டாக வெட்டிக் முகம் சிதைத்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், எதிர்ப்பை மீறி தனது தங்கையை திருமணம் செய்து கொண்டதற்காக வான்மதியின் சகோதர் செல்லச்சாமி நம்பிராஜனை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் வான்மதியின் சகோதரரை போலிஸார் தேடி வருகின்றனர்.