பொங்கல் பண்டிகைக்காக ரூ.1,000 ரொக்கமும், பொங்கல் பரிசும் இந்த ஆண்டும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக தமிழக அரசு ரூபாய் 2363.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டது.
அதில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் ரேஷன்கார்டு தாரர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 ஆகும். இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரவிருப்பதால், முன்கூட்டியே பொங்கல் பரிசுத் திட்டத்தின் மூலம் பணம் தர திட்டமிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை முடியும் வரை கூட பலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தாண்டு உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, முன்கூட்டியே ரூபாய் 1,000 கொடுத்து மக்களைக் கவர திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க அரசு. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நாளை மறுநாள் முதல் (நவம்பர் 29) முதல் துவக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.