கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செவிலியர் லதா. இவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மகனின் பிறந்த நாள் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார்.
கோயில் வளாகத்தில் உள்ள உள்ள விநாயகர் கோயிலுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூசை பொருள்களை தர்ஷிண் என்ற தீட்சிதரிடம் கொடுத்துள்ளார். பூசைப் பொருள்களை வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்று தேங்காயை மட்டும் உடைத்து விட்டு அர்சனைத் தட்டைக் கொடுத்துள்ளார் அந்த தீட்சிதர்.
மகனின் பிறந்தநாளுக்கு அர்சனை செய்யவந்தால், பெயரைக் கூட கேட்காமலும், கடவுளுக்கு மந்திரம் கூட சொல்லாமலும் ஏன் பூசை செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் லதா. உடனே ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷிண், ’ஏன் நீ வந்து உள்ளே பூசை செய்யேன் செய்யேன்’ என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருகட்டத்தில் அநாகரிகமான வார்த்தையில் லதாவை தீட்டி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார் தீட்சிதர் தர்ஷிண். இதில் கோயில் வளாகத்திலேயே லதா மயங்கி விழுந்துள்ளார்.
இதைபார்த்த அங்கிருந்த பக்தர்கள் லதாவுக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தனது நகையை லதா பறிக்க வந்ததாலேயே கீழே தள்ளிவிட்டதாக தீட்சிதர் தர்ஷிண் தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் அங்கிருந்த பக்தர்கள் சிலர் வீடியோவாக தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த லதாவை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனை அனுமதித்தனர். பின்னர் லதா மற்றும் சில பக்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதில் வழக்குப் பதியப்பட்ட சம்பவம் தெரிந்து தீட்சிதர் தர்ஷிண் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் போலிஸார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர். தனது வேலையை முறையாகச் செய்யாமல் அலட்சியமாக நடந்துக்கொண்ட தீட்சிதரைக் கேள்விக் கேட்டதற்காக பெண்ணின் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.