சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் அரசு நிலத்தை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. தமிழக அரசு, 1970ம் ஆண்டு இத்தகைய நிலங்களுக்கு, சந்தை மதிப்பின் இரு மடங்கில் 7 சதவீதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், 2000ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 15 ஆண்டுகளுக்கான குத்தகை தொகை அரசுக்கு வராமல் உள்ளது. இந்தத் தொகை ரூபாய் 2,081 கோடி என சிஏஜி அறிக்கை தெரிவித்தது. அந்தத் தொகையை குறைக்க அ.தி.மு.க அரசு முறைகேடாக பேரத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அதைக் குறைப்பதற்காக 'பேரம்' நடத்துவது யார் லாபத்திற்காக எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி! அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக? 'கமிஷன், கரப்ஷன், கலக்ஷன், பேரம்' - இதுதவிர அ.தி.மு.க ஆட்சிக்கு வேறு எதுவுமே தெரியாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.