சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் காரப்பக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
முரளி வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர். ஆனால், எதிர்ப்புகளை மீறி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணை முரளி திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், முரளி தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காலை 8 மணியளவில் முரளி அப்பகுதியில் உள்ள டீ கடையில் நின்றுக்கொண்டிருந்தார். அங்கு தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முரளியை சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.
இதில், படுகாயம் அடைந்த முரளி அதே இடத்தில் உயிரிழந்தார். பின்னர், இந்த சம்பவத்தின் போது பொதுமக்கள் கொடுத்தப் தகவலின்படி, விரைந்துவந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் முரளி ஆணவப்படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடைபெற்று மூன்று மாதங்களே ஆனநிலையில் முரளி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.