திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலின் தக்காராக உள்ளவர் அ.தி.மு.க-வை சேர்ந்த ஜெயசங்கர்.
இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தக்காரக உள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திருத்தணி கோயிலில் கந்தசஷ்டி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அங்கு திருத்தணியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் சென்றுள்ளார். இவர் திருப்பதி தேவஸ்தான பிரமுகராகவும் உள்ளார். முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்திற்கு குப்புசாமி சென்றுள்ளார்.
ஆனால் அதற்கு ஜெயசங்கர் அனுமதிக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்துள்ளனர். இந்நிலையில், வீட்டுக்கு சென்ற ஜெயசங்கர் ஆத்திரம் தாங்காமல் குப்புசாமிக்கு போன் செய்து தகாதவார்த்தகளை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்த குப்புசாமி திருத்தணி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிந்துவிட்டு ஜெயசங்கர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிவருகின்றனர்.
அ.தி.மு.க பிரமுகர் என்பதால் ஜெயசங்கர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குப்புசாமியை செல்போனில் ஜெயசங்கர் மிரட்டிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.