சென்னை பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் தூக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதில் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேருந்தில் பயணித்த 16 பயணிகள் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து, இன்று அதிகாலை பாடி மேம்பாலம் அருகே நெல்லூரில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுனர் தூங்கியதில் அதிவேகமாகச் சென்ற பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் நடத்துனர் வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக வில்லிவாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி முதல் தொடர் வேலை மற்றும் இரண்டு பணிகள் என ஓய்வின்றி ஓட்டுநர்கள் பணி செய்வதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓட்டுனர்களுக்கு போதிய இடைவேளை இன்றி பணிச் சுமை தருவதால், தங்கள் வாழ்க்கையே ஆபத்தில் சிக்குவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.