தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : சி.பி.ஐ விசாரணைக்கு அவசியம் இல்லை - தமிழக அரசு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : சி.பி.ஐ விசாரணைக்கு அவசியம் இல்லை - தமிழக அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல, பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

அப்போது, அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணபட்டுவாடா வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

தி.மு.க வேட்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் காவல் துறையினர் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையின் போது, இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories