ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உக்னே பெரேவெரி சைவத். இவர் துபாயில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது சென்னையைச் சேர்ந்த ருமேஸ் அகமது என்பவரைச் சந்தித்திருக்கிறார்.
முதலில் நண்பர்களாகப் பழகிய இருவரும் பின்பு காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ருமேஸ் அகமது, உக்னேவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உள்ளார். இதனை அடுத்து உக்னேவை இந்தியாவிற்கு அழைத்து வந்து கேரளா மாநிலம் கொச்சியில் தங்க வைத்திருக்கிறார்.
அப்போது உக்னே ஐந்து மாதம் கர்ப்பம் அடைந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ருமேஸ் அகமது மற்றும் அவரது தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
கருக்கலைப்பு செய்த பின் அந்தப் பெண் மீண்டும் கருவுற்று இருக்கிறார். இதனால் இந்தமுறையும் கருவை கலைக்குமாறு ருமேஸ் சொல்ல இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஐரோப்பிய நாட்டு பெண்ணை தனியாக விட்டுவிட்டு தொழில் அதிபர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி துபாயில் இருந்து அழைத்து வந்து ஏமாற்றுவதாக ருமேஸ் அகமது மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உக்னே.
இதனைத் தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ருமேஸ் அகமது மற்றும் அவருடைய தந்தை இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.