தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ் தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்கள் பேசுவதும், ஊழியர்கள் பேசுவதும் புரியாமல் மாறி, மாறி தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் திமுக எம்.பி வில்சன் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். இதன்மூலம் வாகன ஓட்டிகள் பேசுவதை எளிதில் புரிந்து கொண்டு, விரைவாக செயலாற்ற முடியும்.
தமிழகத்தின் டோல்கேட்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரியாத நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களால் தமிழர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தமிழக டோல்கேட்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. எம்.பி வில்சனின் இந்த கோரிக்கைக்கு தமிழக இளைஞர்கள் பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.