கீழடி தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து கீழடி தொல்லாய்வு தளத்திலிருந்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :
கீழடி நாகரிகமானது தமிழர்களின் பண்டைய நகர நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாக நிலவியது என்பதை கரிம ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது தமிழர்களின் பெருமைமிகு வரலாற்றிற்கு சான்றாக விளங்குகிறது. எனவே இந்த வரலாற்று தொல்லியல் ஆய்வுகள் முழுமையாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
கீழடியில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய அரசின் அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன், இடையிலேயே
இந்த பணியில் இருந்து திரும்ப பெறப்பட்டது கண்டனத்திற்குரியதாகும். அவர் தமது ஆய்வுகளை முழுமையாக முடிப்பதற்கு மத்திய அரசு ஏன் முட்டுக்கட்டை போட்டது என்பதை
விளக்கவேண்டும். அதுமட்டுமின்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கியுள்ள ஆணையின்படி அமர்நாத் தலைமையில் எழுதப்படுகின்ற கீழடி வரலாற்று ஆய்வு அறிக்கை முழுமையாக வெளிவர அவருக்கு முழு ஒத்துழைப்பை மத்திய தொல்லியல்
ஆய்வுத்துறை வழங்க வேண்டும்.
கீழடி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு குறுகிய நிலப்பரப்பில் மட்டுமே. ஆனால் முழு நகர கட்டுமானம் மற்றும் அதன் தொல் ஆவண பொருட்கள் முழுமையாக வெளிவர வேண்டிய அவசியம் இருக்கின்ற காரணத்தினால் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் எனவே, மாநில அரசு நூறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கீழடி தொல்லியல் ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உலகம் முழுவதும் தொல்லியல் ஆய்வுகள் நடக்கின்ற இடத்தில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து அந்த இடத்திற்கு அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோ வழிகாட்டுதல் ஆகும். அதைப் பின்பற்றியே உலகம் முழுவதும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. இதை இந்திய அரசு தொல்லியல் ஆய்வு நிறுவனமும் செயல்படுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் கீழடியில் சேகரிக்கப்பட்ட அனைத்து தொல்லியல் பொருட்களையும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். அந்த அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைய வேண்டும்.
ஆதிச்சநல்லூர், கொடு மணல், அரிக்கமேடு, பூம்புகார், நாங்கூர், மருங்கூர், பொருத்தல், அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொல்லியல் மற்றும் மாநில தொல்லியல் ஆய்வுத்துறைகளின் கீழ் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சில ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் முழுமையாக இன்னும் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக மிக முக்கியமானதாக ஆதிச்ச நல்லூரில் 2004-2005ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. பொது மக்கள் போட்ட வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பல ஆண்டுகளாக மத்திய அரசு ஏன் இவற்றை கிடப்பில் போட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த ஆய்வு அறிக்கைகளை முழுமையாக உடனடியாக வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வு இடங்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் உடனடியாக ஆய்வு பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
தமிழகத்தில் ஆய்வு செய்யப்படுகின்ற அனைத்து தொல்லியல் ஆய்வு இடங்களும் ஒற்றைக் குடையின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அதன் மூலம் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதனடிப்படையில் தமிழர்களின் பண்டைய வரலாற்றின் ஒருங்கிணைந்த தொடர்புகளை மீட்டெடுக்க முடியும் எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பணியை மேற்கொள்ள
வேண்டும்.
மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு அமைப்பான ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா தமிழக தொல்லியல் ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசின் தொல்லியல் ஆய்வு அமைப்பு தன்னிச்சையான அமைப்பாக செயல்பட வேண்டும் மத்திய அரசின் அனுமதிக்கு அது காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து தொல்லியல் ஆய்வு அறிக்கைகளை தமிழகத்தின் முன்னணி ஆய்வு அறிஞர்கள் கொண்ட குழுவினர் தொகுக்கும் வேலையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.
தமிழக தொல்லியல் ஆய்வுத் துறைக்கு அதிக அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தன்னார்வலராக வரும் ஆய்வு மாணவர்களுக்கு அவர்கள் தொல்லியல் பணிகளில் ஈடுபடுகின்றபோது பகுதிநேர பணியாளர்கள் என்கிற அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம்
வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பெரிய அளவிலான மாணவ தன்னார்வலர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்த முடியும்.
மைசூரில்அமைந்துள்ள மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள சுமார் 69 ஆயிரம் தமிழ் கல்வெட்டு ஆவணங்கள் அனைத்தும் தமிழகத் தொல்லியல் ஆய்வுதுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதில் உள்ள அனைத்து ஆவணங்களும் உடனடியாக பதிப்பிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மறைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பழைய வரலாறு முழுமையாக வெளிவரும். எனவே மத்திய அரசு இதில் கவுரவம் பார்க்காமல் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க முன்வர வேண்டும்.
எமது தொகுதியான சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகள் பெருமளவில் கிடைத்திருக்கின்றன மேலும் கல்படிமங்களாக மாறியுள்ள மரங்களின் தொகுதிகள் பெருமளவில் கிடைத்திருக்கின்றன. எனவே இந்த பகுதிகளை இயற்கை அருங்காட்சியகங்களை அமைக்க மத்திய அரசு அல்லது மாநில அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும். அவருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அமைத்து தருவதன் மூலம் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும்.
மேற்கண்ட இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்புவோம். பிரதமரிடமும் சம்பந்தப்பட்ட துறைகளிடமும் இதற்கான அறிக்கையையும் கோரிக்கையையும்
முன்வைப்போம். கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி இதை தேசிய விவாதமாக மாற்றுவோம்.
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மாநில அரசு முன்வரவேண்டும். அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.