சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் வைத்துச் செய்யப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கீழடியை தமிழ்நாட்டைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்கவேண்டும் எனவும், அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் பெங்களுரூ மற்றும் சென்னையில் சீல் வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அவற்றை எடுத்து ஆய்வறிக்கை தயாரிக்க தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆய்வறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை.
ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழாய்வை மூடி மறைத்தது போல், கீழடி அகழாய்வு குறித்து ஆய்வறிக்கை வெளியிடாமல் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற கேள்வி தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது. மேலும், பெங்களூருவிலுள்ள கீழடி தொல்பொருட்கள் சேதாரமின்றி மீண்டும் கீழடிக்கு வந்து சேருமா என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து மீண்டும் கீழடிக்கே கொண்டு வந்து, அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்குக் காட்சிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' எனத் தெரிவித்துள்ளார்.