நாடு முழுவதும் நாளை ஆயுத பூசை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள், வணிக நிறுவனத்தினர், சிறு குறு கடைக்காரர்கள் என அனைவருமே பூசைகள் முடித்ததுமே, பூசணிக்காய்களை திருஷ்டிக்காக சுற்றி வீதியில் உடைப்பார்கள்.
இந்த வழக்கத்தால் அதிக இடங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்படுகிறது. இதுபோல அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளைச் செய்ய வேண்டும்.
திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து அதனால் விபத்து ஏற்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கி , விபத்தில்லா ஆயுத பூஜை பண்டிகையைக் கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.