அரசு ஊழியர்கள் என்றாலே பொதுமக்களுக்கு அலட்சியம், மெத்தனம், லஞ்சம் போன்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வரும். அப்படி இருந்தும் பல நேர்மையான அதிகாரிகள் தங்களுக்கு உண்டான அதிகாரத்தில் பல்வேறு நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த அரசு அதிகாரியின் செயல் ஊழியர்கள் மத்தியிலும், பொதுமக்களின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு பால் பொருட்கள் நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் உதவி மேலாளராக கிருஷ்ணராஜூ என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர் தனது மேலாண் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாண்லே அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்களான casual, consolidated, regular போன்ற ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு நூற்று முப்பது ரூபாய் கொடுத்து குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்குவது அதிகாரி என்கின்ற முறையில் எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, ஊழியர்களின் வேலைத் தகுதிக்கு ஏற்ப consolidated, regular வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவரை எனது சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.10,000 பிடித்தம் செய்து ஊழியர்களுக்கு பகிர்ந்து அளித்திட முழுமையாக சம்மதம் தெரிவிக்கின்றேன்.
இதனால், அவர்களின் ஒருவேளை உணவிற்கு உதவினாலும் என் மனதிற்கு மகிழ்ச்சியே. எனவே எனது கோரிக்கை ஏற்று consolidated வழங்கும் வரை அமல்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தனது கீழ் உள்ள உள்ள ஊழியர்களின் துயருக்கு வருத்தப்படும் மேல் அதிகாரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. மேலும் பலருர் அதிகாரி கிருஷ்ணராஜூக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.