மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரேமலதா. மாணவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பிரேமலதா 8-ம் வகுப்பு படிக்கும் போதே தமிழக அரசின் மனித உரிமை கல்வி பயின்றவர். அதன் மூலம் பிரேமலதா மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் பங்கேற்றினார்.
இந்நிலையில் தற்போது கல்லூரியில் படித்துவரும் மாணவி பிரேமலதாவுக்கு அக்டோபரில் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது.
அந்த கூட்டத்தில் ‘கண்ணியத்திற்கு ஒரு பாதை : மனித உரிமைகள் கல்வியின் சக்தி’ என்ற தலைப்பில் மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது பிரேமலதா பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அழைப்பை ஐ.நா சபையின் செயலாளர் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மாணவி பிரேமலதா கூறுகையில், “தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. எங்கள் நாட்டில் பல சாதிகள் உள்ளன. அது எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐ.நாவில் உறுதியுடன் பேசுவேன். நான் சட்டம்படிக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேப்போல், ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்பது கூறுதல் பெருமையாகும்.