சென்னை அண்ணா நகர் மேற்கு 20வது தெருவில் வசித்து வருபவர் ராய் (71). இவரது மகன் எட்வர்ட்(49). இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக அமெரிக்காவுக்குச் சென்ற இவர், அங்கே பேரீனா என்ற பெண்ணையும் மணந்து அந்நாட்டின் குடியுரிமையும் பெற்றுள்ளார். எட்வர்ட்டுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பேரீனாவுக்கும் எட்வர்ட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு, அமெரிக்காவிலேயே தனித்தனியே வாழ்ந்து வந்தனர். சென்னையில் உள்ள எட்வர்ட்டின் தந்தைக்கும், தாய்க்கும் அவரை தவிர வேறு யாரும் ஆதரவில்லை. இந்த நிலையில், எட்வர்ட்டின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையறிந்து கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த எட்வர்ட் தனது தாயின் மருத்துவ சிகிச்சைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், எட்வர்ட்டின் விடுமுறை முடிந்துவிட்டதால் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனித்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதை நினைத்தும், தன்னுடைய இல்வாழ்க்கை குறித்தும் நினைத்து மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார் எட்வர்ட்.
இதனையடுத்து, நேற்று முன் தினம் இரவு வீட்டு மொட்டை மாடியில் எட்வர்ட் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பின்னர், நேற்று காலை மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்வதற்காக குடியிருப்பின் மேல் வீட்டில் வசிக்கும் பெண்கள் வந்த போது எட்வர்டின் கரிக்கட்டையான உடலைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
அதன் பிறகு திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், எட்வர்ட் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில் மேற்குறிப்பிட்ட விவரங்கள் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.