போலிஸார் புகாரை ஏற்க மறுத்ததால், பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (78). இவரது மகள் ஜோதி ஜோதி (28). ஜோதி தன் கணவரைப் பிரிந்து, தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதியின் வீட்டுக்கு வந்த முத்துபாண்டி என்பவர், ஜோதியின் அண்ணன் குறித்து கேட்டு, அவரது தந்தை கோபியிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, ஜோதி நேற்று அதிகாலை, தனது தந்தையை அழைத்துக்கொண்டு நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் ஜோதியை காலையில் வருமாறு கூறி புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
இதனால், புகாரை ஏற்க வலியுறுத்தி போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஜோதி. அப்போது பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி என்பவர் ஜோதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற ஜோதி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 42% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நொளம்பூர் போலிஸார் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜோதி தாக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோதியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் நாகராஜ் வாக்குமூலம் பெற்றார்.