தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவுகள், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கவும், அறிவுறுத்தவும் செய்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், விருதுநகர் வத்திராயிருப்பில் 15 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ., நீலகிரி குந்தா அணைக்கட்டில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 7 முதல் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 247.1 மி.மீ., மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 48 % அதிகம் என்றும் கூறியுள்ளது.