நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தின்போது காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஆனால் அவர் கூறியதற்கு எதிர்மாறாக தற்போது வரை பரூக் அப்துல்லா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இத்தகைய போக்குக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “சமூக நீதிக்கான போராட்டத்திற்கான தேவை தற்பொழுது அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே பா.ஜ.க அரசு மொழிப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இந்தி மொழிகுறித்த அமித்ஷாவின் கருத்து மக்களைப் பிளவுபடுத்தும் நாசகர வேலை என்றே தெரிகிறது.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தற்போது நீதிமன்றத்தில் அவர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்று மத்திய அரசு சார்பில் கூறியிருப்பதன் மூலம் அவர் அரசியல் சட்டத்தை மீறிவிட்டார்.
எனவே, குடியரசுத் தலைவர் அமித்ஷாவை உடனடியாக உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் உடனடியாக ஜம்மு - காஷ்மீருக்குச் சென்று அங்கு நடக்கும்உண்மை நிலைகளை ஆய்வு செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளிலும் இதே முறையைக் கடைபிடிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.