தமிழியக்கம் சார்பாக “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்” என்ற நூல் அறிமுக விழா சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில் தமிழியக்கத் தலைவர் கோ.விசுவநாதன், வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி., தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திருமாவளவன் பேசியதாவது, “தமிழ்ப் பெயர் சூட்டுவதிலும் பிற மொழிப் பெயர்கள் சூட்டுவதிலும் அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் நுட்பத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். நான் தமிழ்ப் பெயரை சூட்டுவது தமிழ் உணர்வையோ, இன உணர்வையோ வெளிப்படுத்துவதற்காக அல்ல. அதன்பின்னே ஒரு நுட்பமான அரசியல் இருக்கிறது. சாதி, மத அடையாளம் இல்லாத ஒரே பெயர் தமிழ்ப் பெயர் தான். எனவே இனி தமிழ்ப் பெயர் சூட்டுவோம் என முடிவெடுத்தேன்.
நாம் மொழி வழி தேசியத்தை முன்னிறுத்துகிறோம்.பா.ஜ.க மத வழி அரசியலை முன்னிறுத்துகிறது. காங்கிரஸ் பேசிய தேசியம் இந்தியா என்ற தேசியம். நாடு விடுதலை பெற்ற பிறகு அதற்கான அவசியம் இல்லை. நிலவழி அரசியலை தற்போது பேச முடியாது. அதனால் தான் காங்கிரஸ் அரசியல் நீர்த்துப் போய் வருகிறது. மதம், சாதி ஆகியவை நமக்குத் தேவைப்படாததால் நாம் மொழி வழி தேசியம் செய்து வருகிறோம்.
பொங்கல் மட்டும்தான் தமிழர் திருவிழா, மற்ற அனைத்தும் மதம் சார்ந்த பண்டிகைகள். திராவிடம் தேசியத்திற்கு எதிரானது அல்ல. திராவிடத்தில் பல சமூக,சமயங்கள் இருக்கின்றன. மொழி, இன உணர்வு அரசியல் சார்ந்தது. இந்திய தேசியத்திற்கு மாற்று தமிழ் தேசியம்.
இந்திய தேசியம் இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்து தேசியத்தைத் தான் எதிர்க்க வேண்டும். இந்து தேசியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியத்தை வளர்க்க முடியாது. அரசியல் ரீதியாக வலிமை பெற தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டும். சமஸ்கிருதம், இந்தியை எதிர்க்கும் திராவிட அரசியலே தமிழ்தேசியம் தான். இது புரியாமல் சிலர் பேசி வருகிறார்கள்.
இந்தியை நாம் பேசக் கற்றிருந்தால் மோடியின் வித்தை தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்கும். இந்தி பேசுபவர்கள் தமிழகத்தில் அதிகரித்து இருந்தால் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும்.
தமிழகம் இந்தியாவில் தனித்தீவாக மாறிவிட்டது. அதனால் தமிழகம் குறி வைக்கப்படுகிறது. ஒரே மதம் எனச் சொல்லும் பா.ஜ.க ஏன் சாதி அடையாளத்தை முன்னெடுக்கவில்லை. ஒரே கிராமம் ஒரே சுடுகாடு போன்ற முழக்கங்களை முன்னெடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். ஒரே கலாச்சாரம் என்பது ஒரே மதம் ஒரே மொழி என அவர்கள் சொல்வது இந்து மதம், இந்தி மொழியைத்தான்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குக் காரணம் அங்குள்ள மக்களின் மீது உள்ள அக்கறை அல்ல. ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்ட கால கனவுகளில் ஒன்று. காஷ்மீரில் தீர்மானிக்கும் சக்தி இஸ்லாமியர்கள் என்பதால் பா.ஜ.க அந்த உரிமையைப் பறித்துக்கொண்டது.
ஆர்.எஸ்.எஸ் வரையறுக்கும் திட்டங்களை அரசியல் களத்தில் நடைமுறைப்படுத்துவதே பா.ஜ.க-வின் பணி. பா.ஜ.க-வின் அடுத்த செயல் திட்டமே அரசியலமைப்பின் சட்டத்தை மாற்றுவது தான்.” எனப் பேசினார்.