தமிழ்நாடு

கஞ்சா விற்பதைத் தடுத்த ஊர்மக்களை சரமாரியாக வெட்டிய கஞ்சா வியாபாரி : 3 மாதங்களுக்குப் பின் அட்டகாசம்!

கஞ்சா விற்பதைத் தடுத்து, போலிஸில் பிடித்துக்கொடுத்த ஊர்மக்களைப் பழிவாங்கும் விதமாக, ஊருக்குள் வந்து சரமாரியாக வெட்டிய கஞ்சா வியாபாரி.

கஞ்சா விற்பதைத் தடுத்த ஊர்மக்களை சரமாரியாக வெட்டிய கஞ்சா வியாபாரி : 3 மாதங்களுக்குப் பின்  அட்டகாசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியில் கஞ்சா வியாபாரம் அமோகமாக நடைபெற்று வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து கஞ்சா விற்பனையைத் தொடர்ந்து வந்ததால், ஊர்த் தலைவர் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபார கும்பல் தலைவனான புருஷோத்தமன் நேற்று முன்தினம் ஜாமினில் வெளியே வந்துள்ளான். தன்னை போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்து சிறைக்கு அனுப்பிய பொதுமக்கள் மீது கடும் கோபத்துடன் வந்த புருஷோத்தமன், தனக்கு ஜாமின் பெற செலவான தொகையை ஊர்மக்களே திரட்டித் தரவேண்டும் என மிரட்டியுள்ளான்.

அவனை ஊர் மக்கள் விரட்டியதைத் தொடர்ந்து, அரக்கோணத்தைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் சிலரைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் நேற்று கோவிந்தவாடிக்கு வந்துள்ளான். புருஷோத்தமனும் அவனது கூட்டாளிகளும் ஊர்த்தலைவர் தனஞ்செழியன் வீட்டுக்கு வந்து அங்கிருந்த 6 பேரை பட்டாக்கத்தியைக் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். தனஞ்செழியனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையில் சென்ற சிலரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கஞ்சா விற்பதைத் தடுத்த ஊர்மக்களை சரமாரியாக வெட்டிய கஞ்சா வியாபாரி : 3 மாதங்களுக்குப் பின்  அட்டகாசம்!

தன்னை போலிஸில் ஒப்படைத்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய புருஷோத்தமன் உள்ளிட்ட ரவுடி கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories