இரண்டாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்ததில் இருந்து பல்வேறு புதிய சட்டங்களை இயற்றியும், ஏற்கெனவே இருந்த சட்டங்களில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தும் பல்வேறு புதிய மசோதாக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனையடுத்து புதிய சட்டதிருத்தங்கள் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் மேற்கொண்டு, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது முன்பிருந்ததை விட பன்மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பே சென்னையில் போலிஸார் அமல்படுத்தினர்.
இதனால், அபராதம் விதிப்பார்கள் எனத் தெரிந்து, பலர் முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு அனைத்து விதமான போக்குவரத்து விதிகளையும் மதித்து வருகின்றனர். இப்போது அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் குடித்து வாகனம் ஓட்டியதாக சந்தோஷ் என்ற நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் முதல் ஆளாக விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் சந்தோஷ் செலுத்தியதற்கான ரசீது தற்போது வெளிவந்துள்ளது.
முன்னதாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரமாக இருந்த அபராதம் தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 100 ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.