தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக் கயிறுகள் மற்றும் பேண்ட் அணிந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் இடையே சாதிய மோதல் ஏற்படுவதாகப் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
இதையடுத்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப் பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்த பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும் கூட ஊக்குவிப்பதாகத் தெரிய வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மேலும், அந்த உத்தரவு கடிதம் அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்வித்துறையின் இந்த உத்தரவிற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்று மத சின்னங்களைத் தடை செய்யும் தைரியம் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதிக்கும் அரசாணை தனது கவனத்திற்கு வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியினை வெளிப்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வரவில்லை. எனவே, தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு ஆளும் அ.தி.மு.க அரசு பா.ஜ.க-வைக் கண்டு எப்படி பயந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. தென் மற்றும் வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் சாதிய மோதல் நடப்பது அப்பட்டமாகத் தெரிந்தும், ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்குப் பயந்து இப்படி வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெற்று இருப்பது தமிழக அரசுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட அரசாணையில், சாதிய அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கும் நிலையில், ஹெச்.ராஜா மாற்று மத அடையாளங்கள் குறித்து பேசி இதை மதம் குறித்த சர்ச்சையாக மாற்ற நினைப்பது சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.