முத்தலாக், என்.ஐ.ஏ., ஆர்.டி.ஐ., போன்ற பல மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு மக்களவையில் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திற்கு எதிராக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனையடுத்து பேசிய திருமாவளவன், சிறுபான்மையினருக்கு எதிராகவும், அவர்களை பழிவாங்குவதற்காகவே மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது என குற்றஞ்சாட்டிய அவர் இதனால் இஸ்லாமியர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு எவ்வித எதிர்ப்பு குரலும் கொடுக்காமல் அவர்களுக்கு அடிபணிந்து செல்லும் மாநில அரசையே நாம் கொண்டுள்ளோம் என அ.தி.மு.கவை சாடினார்.