அஞ்சலகத் துறை பணியாளர்களுக்கான தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டும் கேள்வித்தாள் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தபால் தேர்வில் தமிழ் மொழியை சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி தபால் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதியாதது சட்டவிரோதமானது என வாதிட்டார்.
இந்தி மொழி பேசாத மாநிலத்தில் தபால் தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் வாதாடப்பட்ட போது, நடத்தப்பட்ட தபால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தேர்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என ராஜ்ய சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் தமிழ் மொழியில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் இடம்பெறுமா என்று கேள்வி எழுப்பியும், மாநிலங்களவையில் வாய்மொழி வாயிலாக தபால்துறை தேர்வில் தமிழ் மொழியும் இருக்கும் என மத்திய அமைச்சர் அறிவித்ததை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.