சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு (ஜூலை 14) ஏற்பட்ட தகராறின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் அட்டகாசம் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நெற்குன்றத்தைச் சேர்ந்த மணி என்பவர் தனது 2 நண்பர்களுடன் பெட்ரோல் நிரப்புவதற்காக ஆட்டோவில் வந்துள்ளார்.
அப்போது பங்கில் இருந்த இளவரசன் என்ற ஊழியர் பணியை செய்யாமல் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த மணி இளவரசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், இளவரசனை மணி தாக்கியதால் சக ஊழியர்கள் மணியின் நண்பர்கள் இருவரையும், அவர்கள் வந்த ஆட்டோவையும் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து, தப்பியோடிய மணி, சிறிது நேரத்தில் 6க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்துள்ளான். பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.
மேலும், பட்டாக்கத்தியை கண்டதும் அனைவரும் சிதறிச் சென்றனர். இந்த நேரத்தில் பெட்ரோல் பங்கில் சிறைபிடிக்கப்பட்ட மணியின் இரு நண்பர்களையும், ஆட்டோவையும் மீட்டுக்கொண்டு தப்பிவிட்டனர்.
மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் தாக்கியதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜிவ் காந்திக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீசார், பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், மணி, ப்ரவின், விவேக், உதயா உள்ளிட்ட 9 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.