டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிவர்த்தனை செய்யும் முறை எளிமையாக்கப் பட்டிருந்தாலும், அதனால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு எந்தவித பாதுகாப்பு அம்சமும் இல்லை என்பதே நிதர்சனம்.
தற்போது பெரும்பாலானோர் Google Pay உள்ளிட்ட E-wallet செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதின் மூலம் வங்கிகளுக்கு அவ்வப்போது சென்று வரும் சிரமம் குறைக்கப்பட்டாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதுபோன்று உள்ள ஆப்களில் இருந்து பணத்தை திருடுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வரும் ஜோதி என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் Google Pay ஆப் மூலம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கேரளா, ஆந்திரா போன்ற பல மாநில எண்களை கொண்ட தொலைபேசி மூலம் இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த துப்பறிவாளன் பட பாணியில் 750 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரை கொஞ்சம் கொஞ்சமாக நூதன முறையில் ஜோதியின் வங்கிக் கணக்கில் உள்ள 80 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குடியாத்தம் நகர போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Google Pay, Paytm போன்ற இ-வாலட்களை பயன்படுத்துவோர் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், வங்கிக் கணக்கை இ-வாலட்களுடன் இணைக்கும் போது கடவுச் சொல்லை எவரிடமும் பகிராமல் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது போன்ற ஆன்லைன் திருட்டு சம்பவங்களை சில சமூக விரோதிகள் செய்து வருகின்றனர். ஆகையால் இதுபோன்ற தொழில்நுட்ப மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு இ-வாலட்களை உபயோகிப்பதை தவிர்த்தாலே நல்லது எனவும் சில சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.