தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி இருப்பது போல் அதிகபட்ச கல்வித்தகுதியையும் நிர்ணயிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற சக்கரைசாமி என்பவர், நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால், தனக்கு பணி வழங்காமல், கூடுதல் கல்வித் தகுதி எனக் கூறி நிராகரித்துவிட்டதாகவும், எனவே வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் இருக்கும் நிலையில், பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதாகவும், கூடுதல் கல்வித் தகுதி உடையோர் முறையாகப் பணியாற்றுவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான தேர்வுக்கு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்களும் போட்டி போடுவதாகவும், அப்படித் தேர்வான பிறகு எப்போதும் போட்டித் தேர்வுக்கு தயாராவதிலேயே ஆர்வம் காட்டுவதால், அலுவலகப் பணி பாதிக்கப்படுவதாக கூறினார்.
எனவே மனுவை நிராகரிப்பதாக கூறிய நீதிபதி, குரூப் 4 பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி இருப்பதுபோல், அதிகபட்ச கல்வித் தகுதியையும் 3 மாதங்களில் நிர்ணயிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்தார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தற்போது பொறியியல் படித்த மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று வருகிறார்கள். அதிகபட்சத் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் பொறியியல், முதுகலை மேலாண்மை பட்டங்கள் பெற்றவர்கள் இனி குரூப் 4 தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.