தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என அரசு சார்பில் விழிப்புணர்வு செய்து வருவதாகவும், அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், போக்குவரத்து போலீசார், சாலையில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா முன்பு நின்று, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பார்களா என கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
குறிப்பாக, சென்னை அண்ணா சாலையில் கத்திப்பாரா முதல் மன்ட்ரோ சிலை வரையும், காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் கடந்த 2ம் தேதி பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.