தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ள நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் அவ்வப்போது கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறது.
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்தது. இதனால் எவ்வித பலனும் இல்லாமல் இருந்தாலும் மக்கள் இதனைக் கொண்டாடினர். அதன் பிறகு சற்று மழை பொய்த்து இதுகாறும் சென்னையில் மழைப்பொழிவே இல்லை.
இந்நிலையில், பருவமழை இடைவேளை காரணமாக ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும், சென்னையிலும் இந்த பருவமழை இடைவேளை வெப்பச்சலனத்தை உருவாக்குவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், டார்ஜிலிங் ஆகிய இடங்களிலும் அடுத்த வாரம் கனமழை பெய்யும் என குறிப்பிட்ட அவர், மும்பைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து வருவதால், இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.
மேலும், கேரளாவிலும், கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.