நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த்தின் சொத்துகள் ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் எதிர்கொண்ட தே.மு.தி.க படுதோல்வியை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5,52,73,825 ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் உரிய காலத்திற்குள் திரும்பச் செலுத்தாததால் வங்கி சட்டத்தின்படி விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு சொந்தமான சொத்துகளை, வரும் ஜூலை 26-ம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா கட்டவேண்டிய கடன் நிலுவை, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீடு மற்றும் மாமாண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆகிய சொத்துகளை ஏலம் விட திட்டமிட்டுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
ஸ்ரீ ஆண்டாள் அழகர் எஜிகேஷனல் டிரஸ்ட் எனும் பெயரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி 4,38,956 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்தக் கல்லூரி நிலத்துக்கான குறைந்தபட்ச கேட்பு விலையாக 92,05,05,051 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால் கட்சியையும், நிர்வாகத்தையும் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரே கவனித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எனும் நிலையில் இருந்த விஜயகாந்த்துக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலை தே.மு.தி.க-வினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.