தமிழ்நாடு

ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது : அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் போர்க்கொடி!

ரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக் கூடாது என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது : அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் போர்க்கொடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ரயில்வே அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணம் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தென்னக ரயில்வே சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது : அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் போர்க்கொடி!

முன்னதாக திராவிட கழகத் தலைவர் கீ. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. "தெற்கு ரயில்வேயின் உத்தரவுக்கு திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது என்றும், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேசவேண்டும் என்ற உத்தரவை தெற்கு ரயில்வே திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, “தெற்கு ரயில்வேயின் சுற்றிக்கையை தமிழகமும், தி.மு.கவும் அனுமதிக்காது என்றும் ரயில்வே நிர்வாகம் உத்தரவை ரத்து செய்யவில்லை எனில் 1965ல் நடந்ததுபோல மீண்டும் ஒரு மொழிப்போர் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். ரயில்வே துறையின் சுற்றறிக்கை மீண்டும் ஒரு மொழிப்போரை தூண்டும் செயல் என ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டிப் போராட வேண்டிய நிலை வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா தெரிவித்ததாவது, ரயில்வே அலுவலர்கள் ஆங்கிலம், இந்தியில் உரையாடவேண்டும் என்ற சுற்றறிக்கை தமிழர் உரிமையை நசுக்கும் செயல் என்று ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்து வருகிறது என்றும், ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று சொல்வது தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகவே கருதுகிறோம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு என பதிவிட்டுள்ளார்.

மேலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கண்டனம் தெரிவித்து கூறுகையில், அரசுக்கும் மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது என்றும், தெற்கு ரயில்வே தங்கள் சுற்றிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் மனுஷ்யபுத்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்வாக இயந்திரத்துக்கும், மக்களுக்குமான தொடர்பை சீர்குலைப்பதாக ரயில்வேயின் இந்தச் சுற்றறிக்கை அறிவிப்பு உள்ளதற்கு மக்களிடையேயும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories